Siddaramaiah Protest: காங்கிரசுக்கு, பா.ஜ.க பதிலடி போராட்டம்!

Advertisements

கர்நாடகாவிற்கு முறையாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக்கூறி டில்லி ஜந்தர் மந்தரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி மற்றும் பெங்களூருவில் பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.

புதுடில்லி: கர்நாடகாவிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாகவும், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு கர்நாடகாவிற்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

இதனை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக அரசு சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது பேசிய முதல்வர் சித்தராமையா, நாட்டில், அதிக வரி வசூல் செய்யும் மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் கர்நாடகாவில் ரூ.4.30 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளது. கர்நாடகாவில் ரூ.100 வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு வழங்கினால், எங்களது பங்காக ரூ.12- 13 மட்டுமே திரும்ப வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி மற்றும் பெங்களூருவில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, சித்தராமையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய பா.ஜ.,வினர் மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில அரசு தவறாக பயன்படுத்தி ஊழல் செய்வதாக குற்றம்சாட்டினர்.

டில்லியில் பார்லிமென்ட் முன்பு மஹாத்மா காந்தி சிலை முன்பு பதாகைகளை ஏந்தி சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ., எம்.பி.,க்கள் கூறுகையில், உட்கட்சி பிரச்னை காரணமாக, சிவக்குமார் விரும்பியும் முதல்வராக முடியவில்லை. ஆட்சியில் குழப்பம் நிலவுகிறது. இதனால், அவர்கள் டில்லி வந்துள்ளனர் என குற்றம்சாட்டினர்.மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கர்நாடகாவில் பொய்யர்களின் ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *