
திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடலுக்கு இடையே தேர்தல் நடப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை செய்தார். மக்கள் பிரச்சனைக்கு போராடாதவர் விஜய் என்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவான பரப்புரையில் விமர்சனம் செய்தார் பிரகாஷ் ராஜ்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல் மூன்று மாடல்களுக்கான தேர்தல் என்றும் அவை திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடல் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரகாஷ் ராஜ், “தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அடிமை மாடல் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகள் வாயை மூடிக் கொண்டு நிற்கிறார்கள். இந்த அடிமை மாடல் தேவையா? திருப்பரங்குன்றம் விஷயத்தில் மதுரையை மணிப்பூராக மாற்ற முயற்சிக்கிறார்கள். அடுத்து இவர்கள் பழனிக்கு தான் வருவார்கள்.” என்று பேசினார்.
தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை சினிமா மாடல் எனக் குறிப்பிட்டு பேசிய பிரகாஷ் ராஜ், “ஒரே சினிமாவில் டாக்டர் ஆகலாம்.. என்ஜினியர் ஆகலாம்.. ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம்.. ஆனால், அரசியலில் அப்படியே முதலமைச்சர் ஆகிவிட முடியாது. இத்தனை வருடங்களில் தமிழ்நாடு மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்னை வந்தபோது அவர்களுக்காக நின்றது உண்டா?.
நான் பேசிய அளவிற்காவது அரசியல் பேசியது உண்டா? உங்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பு உங்களுக்கான திறமைக்கு… அரசியலுக்கு. ஆனால், நீங்கள் அதனை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம். அதற்காக நாட்டை கொடுக்க முடியாது” என்று விஜய்யை விமர்சித்து பேசினார்.
அதேபோல், “இது அதிமுக – திமுகவுக்கு இடையேயான தேர்தல் கிடையாது, விஜய் சொல்வது தவெக – திமுக இடையேயான தேர்தலும் இல்லை. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான தேர்தல்.” என்றும் பிரகாஷ் ராஜ் பேசினார்.




