
பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனால் கலந்துவிற்கும் கொள்கை முடிவால் நிதின் கட்கரி ஆதாயம் அடைவதாகக் காங்கிரசின் பவன் கேரா குற்றஞ்சாட்டியுள்ளார். பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும், மாசில்லா எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்கும் கொள்கை முடிவு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த முடிவால் கட்கரியின் மகன்களான நிகில், சாரங் ஆகியோர் நடத்தும் எத்தனால் ஆலைகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகக் காங்கிரசின் பவன் கேரா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசில் அமைச்சராக இருந்துகொண்டு தந்தை கொள்கை முடிவெடுப்பதாகவும், மகன்கள் எத்தனால் ஆலையை நடத்திக் கொள்ளை இலாபம் பார்ப்பதாகவும் பவன் கேரா விமர்சித்துள்ளார். கட்கரியின் மகன்கள் சியான் அக்ரோ இண்டஸ்ட்ரி, மனஸ் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆகிய இரண்டு எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களை நடத்துவதாகவும், 2024 ஜூனில் 18 கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனங்களின் வருவாய் இந்த ஆண்டில் 523 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 37 ரூபாயாக இருந்த இதன் பங்குவிலை ஆகஸ்டில் 638 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் பவன் கேரா தெரிவித்துள்ளார்.



