Armstrong Murder case:மொட்டை கிருஷ்ணனை பிடிக்க இண்டர்போலை நாடிய தமிழக போலீஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மொட்டை கிருஷ்ணன் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இண்டர்போல் மூலம் பிடிக்க தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரை பிடிக்க நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும் மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *