
சென்னை: மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் பதில் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் வருகின்ற மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்குச் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும், அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படாமல் என்ற நிலையில் தங்களது மனு இன்னும் பரீசிலிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போது தங்கள் கட்சிக்குச் சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதேபோலத் தற்போதுநடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கும் தங்களது கட்சிக்குச் சைக்கிள் சின்னம் வழக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த மனுமீதான விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

