
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என்று த.வெ.க. அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பலனடையும் வகையில், சுமார் 35 ஏக்கரில் ரூபாய் 103 கோடி மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், சென்னை மாநகரின் காய்கறி மொத்த வியாபார வளாகமும் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, பேருந்து பயணிகளுக்கு மென்மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தில், செங்கல்பட்டு மாவட்டம்,
கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம், எனது தலைமையிலான கழக அரசால் வடிவமைக்கப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் நாளன்று அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை துவக்கி வைத்தேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போலவே, தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை, வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன என்றும், அப்படி ஒரு திட்டம் இருந்தால் உடனடியாக அம்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து,
அதிமுக ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டுமென்று அறிக்கையில் அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.




