இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம்: மத்திய அரசின் முக்கிய இலக்கு – அமித்ஷா..!

Advertisements

இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே மத்திய பா.ஜ.க.அரசின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 20-ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு காவல்துறையினர் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளைஞர்களின் நலனும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதுமே நரேந்திரமோடி அரசின் மிக உயர்ந்த நோக்கமாக உள்ளது என்றும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் விரைவு நீதிமன்றங்களை அமைத்து, விசாரணையை விரைவுபடுத்தவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள முடிவு, இந்த உறுதிப்பாட்டையே பிரதிபலிக்கிறது என்றும், வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள், பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள இந்த முக்கியமான நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையப்போகிறது என்பதை உணர்வார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *