திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என்று அறிவிக்கக்கோரி மனு!

Advertisements

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமணர் நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது எனப் பல இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.

திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த மலைகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமணர் குகைகளைச் சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளைப் பாதித்துள்ளது.

இந்தச் சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையைப் பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

ஆகவே திருப்பரங்குன்றம் மலையைச் சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை, நல்லிணக்கத்தையே விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *