தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளி.!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், சஞ்சார் சாதி செயலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியதால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இரண்டாம் நாளான இன்றும் சிறப்புத் தீவிரத் திருத்தம், தேர்தல் சீர்திருத்தங்கள், செல்பேசிகளில் சஞ்சார் சாதி செயலி நிறுவுதல் ஆகியன குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து தலைவர் ஓம் பிர்லா அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

இதேபோல் மாநிலங்களவையிலும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியினரும் முழக்கமிட்டனர்.

இதையடுத்து அவையைப் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்தி வைப்பதாகத் தலைவர் இராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *