
ஓமலூர் அருகே முன்னால் சென்ற லாரிமீது சுங்கசாவடி ரோந்து வாகனம் மோதியதில் சுங்கசாவடி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் நேற்று இரவுநேர ரோந்து பணியில் ஓட்டுனர் ஓமலூர் நேரு நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரும், ஓமலூர் அடுத்த பெரமச்சூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சதீஷ் என்கிற சுங்கச்சாவடி தற்காலிக ஊழியரும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்தனர்.
அபொழுது தும்பிப்பாடி வரை சென்று மீண்டும் கருப்பூர் பகுதியில் பழுதடைந்த வாகனத்தை மீட்க அழைப்பு வந்த நிலையில் கருப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது புளியம்பட்டி அருகில் முன்னால் சென்ற லாரியை முந்திசெல்ல முயன்ற ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோந்து வாகனம் லாரியின் வலது புறம் பலமாக மோதியது.
இதனால் ரோந்து வாகனத்தின் இடது புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் ரோந்து வாகனத்தில் இருந்த சதீஷ் பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரோந்து வாகனத்தின் ஓட்டுனர் ராஜசேகர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார். ஆம்புலன்ஸ் மூலம் சதீஷ் மற்றும் ராஜசேகர் இருவரையும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
சதீஷை பரிசோதித்த ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதீஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தபின்னர் ஓமலூர் காவல்துறையினர் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விபத்துகுறித்து ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்தக் கோர விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

