தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்.ஆனால் அவர் மேற்கொள்ள இருந்த பரப்புரை கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பனையூரில் தவெக தலைவர் விஜய் திடீர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.தவெக – வுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், முதல் தேர்தலில் தனித்து களம் இறங்குகின்றனர்.இந்நிலையில் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு நேற்று மாலை திடீரென வருகை தந்தார்.
நேற்றைய தினம் பரப்புரை எதுவும் மேற்கொள்ளாத நிலையில், பெரம்பூருக்கு வருகை தந்த விஜய் கோலம் போட்டார். இதனையடுத்து தவெக தேர்தல் அலுவலகத்துக்கு அருகில் உள்ள சில வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இன்றும் பெரம்பூர் தொகுதிக்கு வருகை தரவுள்ளதாக தவெக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவரின் பெரம்பூர் பரப்புரை திடீரென ரத்து என தகவல்கள் வெளியானது. இதனால் தவெகவினர் கடுமையாக அப்செட் அடைந்தனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் விஜய் தனது பரப்புரை தொடர்ந்து ரத்து செய்வதாக அவருடைய ஆதரவாளர்களே இணையத்தில் தங்களுடைய அதிருப்திகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பனையூர் அலுவலகத்தில் பெரம்பூர் தொகுதிக்கான தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு விஜய் தலைமை தாங்குகிறார். பெரம்பூர் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, மக்களிடம் வாக்கு சேகரிப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக இந்த கூட்டத்துக்கு வருகை தந்த நிர்வாகிகளிடம் இருந்து போன்களை பெற்றுக் கொண்டு, அதன்பின்னர் அவர்களுக்கு ஆலோசனை கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

