
மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு விட்டது என்று ஈரான் அறிவித்துள்ளது.. திடீரென இந்த முடிவை ஈரான் எடுக்க காரணம் என்ன..? மேலும் இந்த முடிவு காரணமாக போர் முழுமையாக முடிவுக்கு வருமா என்பது பற்றிய பின்னணி தகவல்களை தற்பொழுது பார்க்கலாம்..!
எந்தச் சூழ்நிலையிலும் ஹார்முஸ் நீரிணையை மூட மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. ஹோர்முஸ் நீரிணை இனி உலகிற்கு எதிரான ஒரு “ஆயுதமாக” பயன்படுத்தப்படாது என்று ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான இந்த முக்கிய கடல்வழிப் பாதையைத் திறந்து வைப்பதற்கான இந்த ஒப்பந்தம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலத்தில் நடைபெற்ற இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பிராந்திய கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , ஈரானிய துறைமுகங்களில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், ஈரானின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். இந்தக் கப்பல்களின் பயணம், ஐ.ஆர்.ஜி.சி (இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை) கடற்படையின் அனுமதியுடன், ஒரு “குறிப்பிட்ட பாதை” வழியாக நடைபெறும் என்று ஒரு மூத்த இராணுவ அதிகாரி கூறியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தற்போது மேற்கோள் காட்டியுள்ளது.
குறிப்பிட்ட வழித்தடமானது ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அந்த அதிகாரி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளபடி, ஹோர்முஸ் நீரிணை வழியாக இராணுவக் கப்பல்கள் செல்வது தொடர்ந்து தடைசெய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஓரு புறம் வரவேற்று பேசினாலும் , மற்றொரு புறம் தனது பிடிவாதமான நிலைப்பாட்டில் அவர் பின்வாங்கவில்லை. அதாவது ஈரானை அமெரிக்கப் போர்க் கப்பல்கள் முடக்கியுள்ள சூழலில், அது தொடரும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வணிகத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்கிறோம்.
ஆனால், ஈரானுடனான எங்களது ஒப்பந்தங்கள் 100% முடியும் வரை, அந்த நாட்டுக்கு எதிரான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும். இந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டதால், இது மிக விரைவாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஈரான் கதவுகளைத் திறந்தாலும், ட்ரம்ப் தனது முற்றுகையை விலக்க மறுப்பது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. லெபனான் போர் நிறுத்தம் உலகிற்கு ஒரு இடைவெளியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பின் திட்டம் முழுமையடையும் வரை மத்திய கிழக்கில் முழுமையான அமைதி திரும்புமா என்பது சந்தேகமே….டிரம்ப் – பின் இந்த செயல்பாடுள் குறித்து உங்கள் கண்முன் வருவது என்ன..? என்பது பற்றி கமெண்டில் பதிவிடுங்க…



