
தேர்வுக்குத் தயாராவது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் முழு ஆண்டுத் தேர்வு வருவதற்கு முன் பள்ளி மாணவ மாணவியரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதைப் பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.அதேபோல் இந்த ஆண்டும் தில்லியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, பெற்றோரும் ஆசிரியர்களும் நண்பர்களும் என்ன சொன்னாலும், அனைத்தையும் மனத்தில் வைத்துக்கொண்டு உங்கள் சொந்தப் பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறினார்.
நமது இலக்கு எப்போதும் எட்டக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும் என்றும் அதை அடையக் கடின முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். எப்போதும் ஆசிரியர் சொல்வதைவிட ஒருபடி முன்னே இருங்கள் என்றும் அறிவுறுத்தினார். சிந்தனையை வளர்த்துக்கொண்டு அவற்றை ஒருங்கிணைத்து அதன்பிறகு பாடங்களைப் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
வந்திருந்த மாணவியரில் ஒருவர் தானே இயற்றி இசையமைத்த தேசபக்திப் பாடலைப் பிரதமர் மோடியிடம் படித்துக் காட்டி வாழ்த்துப் பெற்றார்.
பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்டுவதற்குத் தூய்மையை உறுதிசெய்வதுடன், தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிவார்ந்த முறையில் கையாண்டு அறிவையும் தன்னாளுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.




