
கோவா மாநில வேளாண் துறை அமைச்சராகவும், மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த மூத்த அரசியல் தலைவர் ரவி நாயக், மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 79. பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரில் ரவி நாயக் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, போண்டா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அதிகாலை 1 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் போண்டாவில் உள்ள கட்பபந்தில் உள்ள இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவி நாயக், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (MGP), காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பயணித்து ஏழு முறை MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இரண்டு முறை கோவாவின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
முதல்முறை ஜனவரி 1991 முதல் மே 1993 வரை முற்போக்கு ஜனநாயக முன்னணியின் கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கினார் . ரவி நாயக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.




