Chidambaram: நீங்கள் என்ன கடவுளா? தீட்சிதர்களைக் கடுமையாகச் சாடிய உயர்நீதிமன்றம்!

Advertisements

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலைத்துறை தடையிட தடை விதிக்க கோரி பொது தீட்சிதர்கள் குழு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அப்போது நீதிபதி தண்டபாணி, “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மன கஷ்டங்களைப் போக்க சிதம்பரம் கோயிலுக்கு வரும் மக்கள் அவமானபடுத்தப்படுகின்றனர். கோயிலில் காசு கொடுத்தால்தான் பூக்கிடைக்கும், இல்லையென்றால் விபூதி கூடக் கிடைக்காது.

தீட்சதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாகக் கருதுகிறார்கள். பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் இல்லை. கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போல் தீட்சதர்கள் கருதுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் விசிக நிர்வாகியாக உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதைப்பார்த்த இளையராஜா தட்டிக்கேட்டதுடன் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். அதைப்பார்த்த அந்தத் தீட்சிதர்கள் இளையராஜவை தாக்கியதோடு செல்போனையும் பிடுங்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியது. தொடர்ந்து விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 5 தீட்சதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வழக்குகுறித்து அக்டோபர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அறநிலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *