இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்- அரசியல் தலைவர்கள் புகழாரம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் இரட்டைமலை சீனிவாசன் என நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று எனக் குறிப்பிட்டுள்ளார். சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அவரின் நினைவைப் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பதிவில், தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்று குறிப்பிட்டுள்ளார். சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்குவதாகக் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனது சமூக வலைத் தளப் பதிவில், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் என்று குறிப்பிட்டுள்ளார். இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *