
சரக்கு சேவை வரிக்குறைப்பால் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனத்தின் குரல் என்னும் தலைப்பில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றினார். அப்போது, சமுதாயம், இயற்கை, பண்பாடு ஆகியவற்றிடையே உள்ள ஆழ்ந்த ஒற்றுமையைச் சாத் பூசைக் கொண்டாட்டம் காட்டுவதாகத் தெரிவித்தார்.
மாவோயிசத் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைத்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். சரக்குசேவை வரிக்குறைப்பால் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மலைகளிலும் சமவெளிகளிலும் காடுகள் எவ்வளவு முதன்மையானதோ, அதேபோல் கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் முதன்மையானவை என்று குறிப்பிட்டார்.
உவர்நீரில் வளரும் இந்த மாங்குரோவ் காடுகள் ஆழிப்பேரலை, புயல் ஆகிய இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைத் தணிக்க உதவுவதாகத் தெரிவித்தார். சிக்கமகளூர், குடகு, ஹசன், பழனி, சேர்வராயன்மலை, நீலமலை, ஆனைமலை, வயநாடு, மலைப்புறம் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையும் காபி உலகம் முழுவதும் பெயர்பெற்று விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை இயற்றி 150 ஆண்டுகள் ஆவதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அந்தப் பாடல் 140 கோடி இந்தியர்களின் மனங்களிலும் ஒற்றுமையின் வலிமையை நிரப்புவதாகக் குறிப்பிட்டார்.
ஐதராபாத் நிசாமின் வரிக்கொடுமையை எதிர்த்த கொமாரம் பீமன், நிசாமின் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி சித்திக்கைக் கொன்றுவிட்டு அசாமுக்குத் தப்பிச்சென்றதையும், அதன்பின் திரும்பி வந்து நிசாமுக்குச் சவாலாக விளங்கியதையும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.


