பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்துவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இதில், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிகளும் தங்கள் தரப்பே உண்மையான திரிணாமுல் கட்சி என்று கூறிவந்தது. இதை தொடர்ந்து, இரு அணிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் வரை பெயர் மற்றும் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கட்சியின் மலர் சின்னத்தையும் தற்போதைக்கு எந்த அணியும் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத் தளப் பதிவில், ஒவ்வொரு முறையும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துவதாகவும், பிறகு அதன் தேர்தல் சின்னம் பறிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பது என்றும் ஆனால் அதற்குப் பதிலாக, அது மக்களின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றும் அதே சக்திகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம் என்றும் கூறியுள்ளார்.


