
தமிழகத்தில் ஏற்கனவே சுத்தமாக இருக்கு கோவில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது, அதற்கு உடந்தையாக ஆளுநரே செல்கிறார் என்பது தான் விந்தையாக உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில் மண்டபத்தில் தை கிருத்திகை பெருவிழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் பெருமைகளை போற்றும் விழாவை முன்னிட்டு முருகன் பெருமானின் ஆறுபடை வீடு அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.
கண்காட்சியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, ஆகிய இடங்களில் முருகன் அமைந்திருக்கும் வடிவில் தத்ரூபமாக அலங்காரத்துடன் அமைக்கப்பட்டு ஆறுபடை வீடுகளில் சிறப்பு பிரசாத பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது,
அதனைப் பார்வையிட்ட அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.அதனைத் தொடர்ந்து தை கிருத்திகை சிறப்பு விழாவில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினார்,
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கோவில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது. அதற்கு உடந்தையாக ஆளுநரும் செல்கிறார் என்பது தான் விந்தையாக உள்ளது. ஏற்கனவே பாம்பன் சுவாமிக்கு நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடிய அரசு திமுக அரசு, ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டிருக்கும் அரசு திமுக அரசு இப்போது பாஜகவினர் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தை கிருத்திகை தைப்பூச தினத்தன்று அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றும் இதேபோன்று ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்குவதற்கு மட்டும் 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் இரா.வான்மதி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண ஷர்மா, சுவாமி மலை துணை ஆணையர். உமா தேவி, செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன். மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோயில் செயல் அலுவலர்கள் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


