Overdose: தவறான சிகிச்சையினால் ஊசலாடும் உயிர்!

Advertisements

தவறான சிகிச்சையினால் ஊசலாடும் உயிர்…
ஹெவி டோஸ் கொடுக்கப்பதே காரணம்…

நடந்து சென்றவர் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்…
யார் காரணம்?

சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் பால் செல்வன். இவரது மனைவி டெய்சி. இவருக்கு வயது 49. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.கடந்த மே மாதம் 8-ம் தேதி அன்று, மனைவி டெய்சிக்கு காலில் வலி பிரச்சினை இருந்ததால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு உள் நோயாளிகள் பிரிவில் 15 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்குக் கால் வலி பிரச்சினை சரியானது. பின்னர், கர்ப்பப் பையில் ஏதோ நீர்க்கட்டி இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிபாரிசுக் கடிதம் கொடுத்து, தாய் சேய் முகப்பேர் அரசு, எழும்பூர் மருத்துவமனைக்கு டெய்சியை அனுப்பி வைத்துள்ளனர்.

டாக்டர்கள் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் டெய்சியை சேர்த்துள்ளார் கணவர் பால் செல்வன்.6.6,2023 அன்று முதல், சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17,18 -ம் தேதிகளில் சரியான மருந்துகள் இல்லை என்று கூறிய செவிலியர்கள், 19-ம் தேதி மருந்து வந்துவிட்டதாகக் கூறினர்.

அதே சமயம் இரண்டு நாள் கொடுக்கபட வேண்டிய மருந்துகளைச் சேர்த்து கொடுத்துள்ளனர். டோஸ் அதிகமானதால் டெய்சிக்கு திடீரென்று வாய்க் கோளாறு மட்டுமல்ல பேச்சு வார்த்தையும் வரவில்லை. வயிற்றுப் பிரச்சினைக்கும் வாய்க்கும் என்ன சம்மந்தம்? சோதனைமேல் சோதனை. என்ன செய்வது ஏது செய்வது எனக் குமுறினர் தம்பதிகள்.

பட்ட காலிலே படும் என்பது போல, இன்னொரு செய்தி இடி போல வந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான கால் கூட இப்போது செயல் இழந்து விட்டது. சோகத்தின் உச்சிக்கே சென்றனர் தம்பதி.

அன்றிலிருந்து இன்று வரை படுத்த படுக்கையாக இருப்பதால் செய்வதறியாத கணவர் பால் செல்வன் தவறான சிகிச்சையினால் தன் மனைவி படுத்த படுக்கையானது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் , முதலமைச்சர் தனிப் பிரிவிற்கும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துறையினர், எழும்பூர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு, மருத்துவர்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்திச் சென்றனர்.

ஆனால் “இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில்” விட்ட மருத்துவமைனையோ சரிவரச் சிகிச்சை கொடுக்க வில்லையாம். புகார் கொடுத்த காரணத்தால் கோபமுற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் டெய்சியைக் கண்டு கொள்ளவே இல்லையாம். எப்போதாவது ஒரு முறை வந்து ஒப்புக்கு பார்த்துவிட்டுச் சென்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்து அழுது புலம்புகிறார் கணவர்.

இந்நிலையில் சுவாசக் கோளாறும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி வெண்டிலேட்டர் மூலமாகச் செயற்கை சுவாசத்திற்கு சிகிச்சை அளிப்பதாகக் குண்டைத் தூக்கி போட்டுள்ளனர் டாக்டர்கள்.கால் வலி என்று சென்றவருக்கு, கர்ப்பப்பை கோளாறு, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு என இல்லாத நோய்கள் எல்லாம் வந்துவிட்டது.

மருத்துவமனையா இல்லை மரணம் உருவாக்கும் மனையா?? நன்றாக நடந்து வந்தவர், நாட்களை எண்ணும் படி செய்து விட்டார்கள்.

இப்படி கதறும் பால் செல்வன் என்னிடம் கையெழுத்தும் வாங்கி விட்டார்கள். மருத்துவர்கள்மீதும் செவிலியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிர் காக்கும் டாக்டர்கள் உயிருக்கு உலை வைக்கிறார்கள்… எனக் கண்ணீருடன் கலங்கி நிற்கிறார் பால்செல்வன்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *