
அண்ணா பற்றி நான் பேசிய கருத்து சரியானது தான்; அதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்…
கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 50 ஆண்டுகளாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவில்லை.
அதிமுக – பாஜக இடையே பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்பதை அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன், இதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன், தன்மானமே எனக்கு முக்கியம். எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. யாரையும் நான் தவறாகப் பேசவில்லை.
கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது. அண்ணா பற்றி நான் பேசிய கருத்து சரியானது தான்; அதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாறு ரீதியாக நடந்த விஷயத்தைப் பேசினேன். அண்ணா குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தனியார் செய்தி குழுமம் கூறியதை நான் ஏற்க மாட்டேன். அண்ணா குறித்து வந்த செய்திகள், வரலாறுகளை நான் வெளியிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


