Oragadam: ஏடிஎம் மிஷினை கல்லைப் போட்டு உடைத்த வாலிபர்!

ஒரகடத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா  ஏடிஎம்மில் குடிபோதையில் கொள்ளையடிக்க முயன்ற நபரைப் போலீசார்  கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்குத் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒரகடம் அருகே தங்கி தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (29) என்ற தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் நேற்று இரவு மது போதை தலைக்கேறிய நிலையில் ஒரகடம் அருகே தூக்கம் வராமல் அலைந்து திரிந்து உள்ளார்.

ஒருகட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் ஒரகடத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் ன் உள்ளே புகுந்த சுந்தரமூர்த்தி ஏடிஎம் மிஷினை கல்லைக் கொண்டு உடைக்க முயன்றுள்ளார்

இதனால் ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் வேலை செய்து சத்தம் போட்டுள்ளது. அலாரம் சத்தம் கேட்டவுடன் அலறியடித்து ஓடிய சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பிச் சென்று தனது அறைக்குச் சென்றுள்ளார்.

ஏடிஎம் அலாரம் மூலம் அருகில் உள்ள ஒரகடம் காவல்நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது
தகவலின் பேரில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளையும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள செல்போன் சிக்கலையும் வைத்துத் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தான் போதையில் இருந்ததாகவும் என்ன நடந்தது எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னலை ஆதாரமாகக் கொண்டு சுந்தரமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *