
பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் கார்களுக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை என்றும், அதனால் ஹைட்ரஜன், எத்தனால் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் பஸ்வேர்ல்டு இந்தியா என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது பெட்ரோல், டீசல் எஞ்சின்களைத் தயாரிப்போர் ஹைட்ரஜன், எத்தனால் ஆகியவற்றால் இயங்கும் எஞ்சின்களைத் தயாரிப்பதற்கு மாறிவிட வேண்டும் என்று உண்மையான வாகன உதிரிப் பாகங்களைத் தயாரிப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இனிப் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு 22 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இது ஒரு பொருளாதாரச் சிக்கல் மட்டுமல்லாமல், சூழலை மாசுபடுத்தும் சிக்கலாகவும் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பேருந்தையும் மூன்று கட்டங்களாகப் பார்வையிட்டுச் சான்றளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நேரில் பார்வையிடுவதுடன், வீடியோ மூலமும் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படும் என்றும், இந்த நடைமுறையைப் பின்பற்றாவிட்டால் உறங்கும் வசதிகொண்ட பேருந்துகளைப் பதிவு செய்ய முடியாது என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.


