
குற்றங்களை மூடி மறைக்கும் வழியையே த.வெ.க.வினர் தேடுகின்றனர் என்று நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி பதிலளித்து பேசினார்.
அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தியே, த.வெ.க.வினர் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும், அதைப் பற்றி, அரசு எந்தக் கவலையும் அக்கறையும் இல்லாத அளவுக்குத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதைவிட மோசமாக, அந்தக் குற்றத்தை எப்படி மூடி மறைப்பது என்பதற்கான வழிகளைத்தான் இன்று அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஒரு குழந்தையின் பிரேதப் பரிசோதனை நடைபெறும் இடத்திற்கே ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளே சென்று, அந்தக் குழந்தையின் பெற்றோருடன் பேரம் பேசும் அளவிற்கு மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எங்களுடைய மகளிரணியைச் சேர்ந்த சகோதரி ஒருவர் அந்த நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறார் என்றும், எனவே, இப்படிப்பட்ட ஒரு மிக மோசமான சூழலில்தான் தமிழ்நாட்டை கொண்டுபோய் அவர்கள் தள்ளியிருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் பல சம்பவங்களில் ஆளுங்கட்சியினரே தொடர்புடையவர்களாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் தெரிவித்த அவர், சிங்கப்பெண் படை என்று பெயர் மாற்றம் செய்து வழங்கியதைப் பற்றி கூட நாங்கள் பெரிதாகப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.



