Joe Biden:ஒட்டுமொத்த உலகிற்கும் இது நல்ல நாள்..ஜோ பைடன் மகிழ்ச்சி!

Advertisements

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்” என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் ஒருவர் எனத் தெரியவந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசாவில் நடத்திய தாக்குதலின் மூலம் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இன்று அதிகாலை இஸ்ரேலிய அதிகாரிகள் எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்குத் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனைகள்மூலம் தற்போது சின்வார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2011ல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்ட பிறகு அமெரிக்கா முழுவதும் காணப்பட்ட காட்சிகளைப் போன்றே எனது இஸ்ரேலிய நண்பர்களுக்கு இது நிம்மதியான நாள் என்பதில் சந்தேகமில்லை. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அகற்ற இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது. ஹமாஸால் இனியொரு அக்டோபர் 7 சம்பவத்தை நடத்த முடியாது. நான் விரைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசுவேன்.

அவர்களை வாழ்த்தி, பணயக்கைதிகளை அவர்களது குடும்பத்தினரிடம் அழைத்து வருவதற்கான வழியைப் பற்றி ஆலோசிப்பேன். அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்.

காசாவில் ஹமாஸ் அதிகாரத்தில் இல்லாத ஒரு நாள் வந்துள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. அந்த இலக்குகள் அனைத்தையும் அடைய யாஹ்யா சின்வார் ஒரு தீர்க்க முடியாத தடையாக இருந்தார். அந்தத் தடை இப்போது இல்லை. இப்போது நிறைய வேலைகள் நம் முன் உள்ளன.” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *