சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தலைவர்கள் வாழ்த்து!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இராதாகிருஷ்ணனின் பரந்த அனுபவமும் ஞானமும் மேலவையின் பெருமையை உயர்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கும், பாஜக நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இராதாகிருஷ்ணனின் தொண்டும் அர்ப்பணிப்பும் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் எப்போதும் சமூக நலம் காப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் இராதாகிருஷ்ணனுக்குப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆகஸ்டு 20ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், தில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற இராதாகிருஷ்ணனை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் செலாரும் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிபி ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது தமிழரான அவருக்கு தமிழகத்தின் திமுக போன்ற கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி. இராதாகிருஷ்ணன் சரியான தேர்வு என்று குறிப்பிட்டள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *