Advertisements

தேசியக் கைத்தறி நாளையொட்டித் தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தேசியக் கைத்தறி நாளையொட்டித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கைத்தறி நெசவாளர்கள் தமிழ்நாட்டின் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி இரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குவதாகக் கூறியுள்ளார்.
எண்ணிக்கையில் இத்தொழில் மூலம் மகளிர் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித் துறை பெரும்பங்கு வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள “வெற்றித் தறி” விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisements




