நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யாமல் தங்களது கட்சி அடைந்த அரசியல் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களின் வாக்குப்பதிவு மனநிலையை விமர்சித்தும் அதிரடியாகப் பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தலில் வாக்குக்கு ஒரு பைசா கூடக் காசு கொடுக்காமல் 36 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் எந்தவொரு பண பலமும் இல்லாமல், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.
ஆனால், மக்களிடம் எப்போதும் ஒரு கருத்து நிலவுகிறது; ‘சீமான் நல்லாத்தான் பேசுறாரு… ஆனால் ஜெயிக்க மாட்டேங்குறாரு’ என்று சொல்கிறார்கள். நீங்கள் வாக்களித்தால் தானே நாங்கள் வெற்றி பெற முடியும்? சீமான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் வாக்களித்தால், நிச்சயம் நாங்கள் ஜெயித்து காட்டுவோம்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஓட்டுக்குப் பணம் வாங்கும் வழக்கத்தை மக்கள் கைவிட்டு, நேர்மையான கொள்கை அரசியலை ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும், வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
தமிழக அரசியலில் தேர்தல் பணப் பட்டுவாடா குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சீமானின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது..


