டெங்குவை தடுக்க மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை……..பகலில் கடிக்கும் கொசுவால் ஏற்படும் ஆபத்து……..16 ஆயிரம் பேருக்குமேல் பாதிப்படைந்த நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்………….
தமிழகத்தில் பருவமழை காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் செப்டம்பர் 18 வரை மாநிலம் முழுவதும் 16,830 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அளவிலான டெங்கு பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மலேரியா, சிக்கன்குனியா, எலிச்சல் மற்றும் H1N1 ஃபுளூ காய்ச்சல் இப்படி பல்வேறு காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 156 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு மற்றும் பருவமழை காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகங்களில் தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் காதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த கொசுக்கள் இரவில் மட்டுமல்லாமல், பகல் நேரத்திலும் கடிக்கும். வீடுகளைச் சுற்றி தேங்கும் சுத்தமான நீர், பூந்தொட்டி, பழைய டயர், தேங்காய் ஓடு, தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பாக அமைகிறது.
டெங்கு எப்படி பரவுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். டெங்கு வைரஸ் என்பது ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் கடிப்பதால் மட்டுமே பரவுகிறது. டெங்கு வைரஸ் பாதித்த ஒருவரை ஏடிஸ் கொசு கடிக்கும்போது, வைரஸ் கொசுவுக்குள் செல்கிறது. பின்னர் அந்த கொசு மற்றொரு நபரை கடிக்கும்போது, வைரஸ் அவருடைய ரத்தத்தில் செலுத்தப்பட்டு டெங்கு தொற்று ஏற்படுகிறது. டெங்கு பொதுவாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது. பாதிக்கப்பட்ட நபரை கடித்த கொசு மூலம் மட்டுமே பரவுகிறது.
டெங்கு வைரஸ் பரவலை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அதாவது திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, தசை மற்றும் மூட்டு வலி, உடல் சோர்வு, வாந்தி, தோலில் தடிப்புகள் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு தீவிர வயிற்று வலி, தொடர் வாந்தி, ஈறுகளில் ரத்தப்போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்துவதில் 2026-ஆம் ஆண்டு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டேகிடா நிறுவனத்தின் கெடங்கா என்ற டெங்கு தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO கடந்த ஜூலை 2026-இல் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும். 4 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வருகிற 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டெங்குவை எதிர்கொள்ள மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பது மட்டும் போதாது. நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வராமல் தடுப்பதே முக்கியம். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து, கொசுக்கள் பெருகாத வகையில் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்காத வீடு; டெங்கு இல்லாத நாடு என்ற நோக்கத்துடன் அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும். டெங்குவை வெல்ல சிகிச்சையைவிட தடுப்பே முதல் ஆயுதம்!

