Advertisements

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக கிராமம் தோறும் சென்று வாக்கு சேகரிக்க போகிறேன் என பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார் . கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் மன்சூர் அலிகான்.
இவர் சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருபவர் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தார். இதன் பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் பெரியகுளத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார் .
இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் . கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் .
மன்சூர் அலிகான் எதையும் மனம் திறந்து பேசக் கூடியவர் இதனால் ஏராளமான சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக காங்கிரஸ் கட்சியில் சேர போவதாக அறிவித்திருந்தார் பின்னர் அதில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டார் . தற்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் நான் திமுகவுக்காக கிராமம்தோறும் சென்று பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் .
இது குறித்து அவர் பேட்டியில் தெரிவித்த போது நான் ஒரு நடிகன் ஏதோ இன்றைக்கு போராடவில்லை கடந்த 1998 ஆம் ஆண்டு 600 ஏக்கரில் ஆளுநர் மாளிகை எதற்காக இருக்கிறது. அங்கு நீச்சல் குளம் மற்றும் மல்யுத்த வீரர்களுக்கு மைதானங்கள் கட்ட வேண்டும் என போராடி இருக்கிறேன் . இதன் காரணமாக சுமார் 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன் நான் பல கட்சிகளில் இருந்திருக்கிறேன் ஆனால் யாரையாவது ஏமாற்றி விட்டேன் என்று என் மீது எந்த புகார் கிடையாது.
மனதில் பட்டதை பேசுவேன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றாலும் கவலை இல்லை . பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே பாசிச சக்திகள் தான். நம் நாட்டை நாசமாக்கும் எஸ் ஐ ஆர் தடுக்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சி கூட்டணி போட்டு தேர்தலில் இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் கிடைக்காது. வருகிற 2026 ஆம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் நானே அந்த கட்சிக்காக வேலை செய்யப் போகிறேன். என்னுடைய போராட்டமும் பிரச்சாரமும் தரையில் கால் பதியும் .
நடிகர் விஜய் போல வானத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்க மாட்டேன் இந்த கால் தரையில் பட வேண்டும் அடி மக்களை சென்று சந்திக்க வேண்டும். சந்தைகள் வயல்வெளிகள் சாலைகளில் இந்த கால் பட வேண்டும். வானத்தில் உலாத்திக் கொண்டு வானதூதுவர்களாக இருக்கக்கூடாது விமானத்திலேயே சென்று விட்டு விமானத்திலேயே வந்தால் பணக்காரனுக்குத்தான் அவர்கள் ஆதரவாக இருப்பார்கள் .
அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது . அவரை பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை . இது மட்டுமல்லாமல் கரூர் துயரம் குறித்து நான் பேசியதற்கு விஜய் எனக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை . விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளதாக சொல்கிறார் செய்யட்டும் நிறைய பணம் வைத்திருக்கிறார் ஆகவே நிறைய செலவு செய்யட்டும் என்று கூறி இருக்கிறார் .
சினிமாவில் வில்லன் நடிகராக நடித்தாலும் மன்சூர் அலிகானை பார்ப்பதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் திரளும் என்பது முக்கிய செய்தி ஆகும். முன்னதாக ஜனநாயகப் புலிகள் கட்சியின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட ஏற்பாடுகள் செய்தார். அந்த கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் தராததால் சுயேச்சையாக போட்டியிட்டார் . அவருக்கு தேர்தல் கமிஷன் பலாப்பழச் சின்னம் தந்தது.
வேலூர் தொகுதி முழுவதும் கடுமையாக பிரச்சாரம் செய்த அவர் இறுதி நாளில் நெஞ்சுவலி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கட்சியை கலைத்து விட்டார். தற்பொழுது தேர்தல் களத்தில் குதிக்கும் மன்சூர் அலிகானுக்கு திமுக மேலிடம் அனுமதி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . இதற்கிடையே திமுக அனுதாபியான நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த தேர்தலில் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே திமுக தரப்பில் அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்திருந்த நிலையில் அவர் தனது சினிமா மார்க்கெட் சரிந்து விடும் என்ற காரணத்தை சொல்லி தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் செய்ய மறுத்திருக்கிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
இதே போல் நடிகர் விஜய் உடன் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்தவர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சாரத்திற்கும் வடிவேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது . அங்கும் இதே காரணத்தைச் சொல்லி மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements




