Narendra Modi: மின் கோபுரத்தில் ஏறிய தொண்டர்கள்.. பிரதமர் மோடி ஆவேச கட்டளை!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது மின் கோபுரத்தின் மீது ஏறி நின்ற தொண்டர்களால் ஆவேசம் அடைந்த பிரதமர் மோடி கீழே இறங்கும்படி கட்டளையிட்டார். மேடையில் இருந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வால் அதிர்ச்சியில் திகைத்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாடும் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் பல்நாடு மாவட்டத்திற்கு முதன் முறையாக வந்த பிரதமர் மோடி, அந்த மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பங்கேற்றார்.

தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவரான நடிகன் பவன் கல்யாண் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

பவன் கல்யாண் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, சில தொண்டர்கள் பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கோபுரத்தின் மீது கும்பலாக ஏறிக் கொண்டிருந்தனர். இதைக் கவனிக்காத பவன் கல்யாண் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால், தொண்டர்கள் மின் கோபுரத்தில் ஏறுவதை பார்த்து விட்ட பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்து, தனது இருக்கையை விட்டு எழுந்தார். பின்னர் பேசிக் கொண்டிருந்த பவன் கல்யாணிடமிருந்து மைக்கை வாங்கிய மோடி, அந்த இளைஞர்களைப் பார்த்து “ஏய் தம்பிகளா… அங்கு என்ன செய்றீங்க? உங்கள் தலைக்கு மேலே மின்சார கம்பிகள் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா. ?இப்படி எல்லாம் நீங்கச் செய்யக் கூடாது.

உங்களை நிருபர்கள் போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதைப் பாருங்கள். .உடனே கீழே இறங்குங்கள். உங்கள் உயிர் விலைமதிப்பற்றது.

காவலர்களே .நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?. ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அந்த வேதனையை எங்களால் தாங்க முடியுமா?” என ஆவேசமாக உரத்த குரலில் கூறினார்.

பிரதமரின் ஆவேச கட்டளையால் கோபுரத்தின் மீது ஏறி இருந்த இளைஞர்கள் உடனடியாகக் கீழே இறங்கி வந்தனர். பிரதமரின் கோபத்தை பார்த்து மேடையில் இருந்த சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் சிறிது நேரம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டனர்.

“மக்கள் குரல்”

‘பிரஜா கலாம்’அதாவது மக்கள் குரல்”என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ஆகும்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் பாரதிய ஜனதா களம் இறங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *