
தற்போது நாடு முழுவதும் “பேசுபொருள்” ஆகி இருக்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.
புதுடெல்லி: கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் திட்டம் என்று கூறி, மத்திய பாஜக அரசால் கடந்த 2018-ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் பத்திர விவரங்கள் தோ்தல் ஆணையத்தால் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை தோ்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடையான ரூ. 16,518 கோடியில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 47 சதவீதம் அதாவது ரூ. 6,060 கோடி நன்கொடை கிடைத்தது தெரியவந்தது.
அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள்மூலம் பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டிருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை “அடியாட்களாக” “கைப்பாவை”யாக மாற்றிப் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆளும் பாஜகவுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்ததும் இதன் மூலம் அம்பலம் ஆகியிருக்கிறது.
400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வந்தது. ஆனால் தேர்தல் நன்கொடை பத்திர பின்னணி தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஆளும் பாஜகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நாடு முழுவதும் இந்த விவகாரம் விவாத பொருளாக மாறி வருகிறது.
அதே நேரத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சூட்டோடு சூடாகப் பதிலடி கொடுத்து வரும் பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் சற்று திணறித்தான் போனார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவர் மட்டும் தான் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளி
த்துள்ளனர். அதுவும் பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அமைப்புகள் லஞ்ச ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகச் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஊடக மாநாடு ஒன்று பேசும்போது புள்ளி விவரங்களுடன் தெரிவித்து இருந்தார். இருப்பினும் கார்ப்பரேட் நிறுவனங்களை “மிரட்டிப் பணம் பறிப்பு” மற்றும் “மிரட்டிக் கொள்ளை” என்பது போன்ற கடுமையான விமர்சனங்களைப் பாஜகவால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. இது தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை தேவையென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தோ்தல் களத்தில் இந்த விவகாரம் எந்த அளவு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரையின்போது இதைப் பார்க்க முடிந்தது. இருப்பினும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் மம்தா பானர்ஜி போன்ற முக்கிய தலைவர்களின் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்து இருந்தால் பாஜகவுக்கு இணையான எதிர்ப்பைக் காட்ட முடிந்திருக்கும்.
அமிர்தம்… அநியாயம்:
மேலும்பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு காலத்தில் நல்லாட்சி, விரைவான வளா்ச்சி, எதிா் காலத்துக்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது அமிா்த காலம் என்று பாஜக குறிப்பிடுகிறது.
அதேநேரம், பணமதிப்பிழப்பு, உரிய முறையில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படாதது உள்பட பல்வேறு தோல்விகளால் நிரம்பிய ‘அநியாய காலம்’ என்று காங்கிரஸ் விமா்சிக்கிறது.
விவசாயிகள்பிரச்சினை:
விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனா்.
விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகமிழைத்துவிட்டதாகக் காங்கிரஸ் விமா்சிக்கும் நிலையில், விவசாயிகள் போராட்டம் அரசியல் ரீதியாகத் தூண்டிவிடப்படுவதாகப் பாஜக கூறுகிறது.
தொலைநோக்கு பாா்வை 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்கு என்று பிரதமா் மோடி தொடா்ந்து கூறிவருகிறாா்.
இந்த இலக்கை எட்டுவதற்கான செயல்திட்டம் தன்னிடம் தயாராக உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இதுசாா்ந்த பிரசாரத்தை பாஜக தீவிரமாக முன்னெடுக்கும் நிலையில், இது மற்றுமொரு வெற்று முழக்கம் என்பது எதிா்க்கட்சிகளின் பதிலடியாக உள்ளது.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலை இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போா் என்று பாஜகவும் காங்கிரஸும் குறிப்பிடுகின்றன. இதனால், தங்களது சித்தாந்த கோட்பாடுகளை இருகட்சிகளும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் என எதிா்பாா்க்கப் படுகிறது.


