Narendra Modi: “குசேலர்” கதையைக் கூறி, உச்ச நீதிமன்றத்தைக் கிண்டல் செய்த பிரதமர் மோடி!

Advertisements

புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதனால் பாஜக மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணர் குசேலர் நட்புபற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்து தாக்குதல் தொடுத்தார்.

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அணுகுமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது. அது கண்டனத்துக்குரியது. மேலும், இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.

எனவே, வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக, தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மார்ச் 21-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல்ஆணையம் அதனை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து தரவுகளையும் வெளியிட்டபின் எந்தத் தகவலும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களும் எந்தவித சார்புமின்றி பொது வெளியில் பகிரப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை!

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஆகியோரின் வாதங்களைக் கேட்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

அத்துடன் இந்த வழக்கில் ஸ்டேட் வங்கி மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்களைத் தலைமை நீதிபதி சந்திர சூட் கடுமையாக எச்சரித்து இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகளைத் மத்திய பாஜக அரசு தனது புலனாய்வு ஏஜென்சிகளை அடியாட்கள்போல் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாகப் பறித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. தேர்தல் சமயத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பாஜனதா மேலிடத்தில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரம் தொடர்பாக விமர்சித்து வருகிறார்கள்.

கிருஷ்ணர் குசேலர்: மோடியின் கிண்டல்

கிருஷ்ண பரமாத்மாவுக்கும் குசேலருக்கும் இருந்த பாலிய சிநேகம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மனைவி குழந்தைகள் என்று குசேலர் கஷ்ட நிலையில் இருந்தபோது மனைவியின் அறிவுரைப்படி குசேலர் கிருஷ்ணரை சென்று பார்ப்பார். ராஜம் மரியாதையுடன் அவரை வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொடுத்த அவலை ஆவலுடன் சாப்பிட்டு விட்டபோது குசேலர் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

உத்திர பிரதேசத்தில் நேற்று நடந்த விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கிருஷ்ணர் குசேலர் நட்பைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் மறைமுகமாகக் கிண்டல் செய்து தாக்குதல் தொடுத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, “ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தனது வரவேற்பு உரையில், “அனைவரிடமும் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கும் ஆனால் என்னிடம் எதுவும் இல்லை எனது உணர்வுகளை மட்டுமே நான் வெளிப்படுத்த முடியும்” என்று கூறினார்.

பிரமோத் ஜி., நல்லவேளை எனக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை. ஏனென்றால் இப்போது காலம் மிகவும் மாறி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் சுதாமா (குசேலர்) கிருஷ்ணருக்கு அவல் கொடுத்தால் அதே சிலர் வீடியோ படமாக எடுத்து வெளியிட்டு விடுவார்கள். அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படலாம். இது தொடர்பான தீர்ப்பில், பகவான் கிருஷ்ணர் குசேலரிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி விடுவார்கள். எனவே நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பது நல்லது தான்” என நக்கலாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பதிலடி கொடுத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *