
அந்தியூர் அருகே கிராம மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதற்காக ஜேசிபி இந்திரத்துடன் மரங்களை வெட்ட முயன்றபோது ஜேசிபி வாகனத்தைச் சிறைபிடித்து கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணமார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தைக் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியை சேர்ந்த மயில்சாமி என்கிற வெங்கடாஜலம் தனது விவசாய தோட்டத்தின் அருகே உள்ள மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்ததுடன் மயானத்தில் வளர்ந்து இருந்த 50 வருட பழமையான மரங்களை இன்று இயந்திரங்கள்மூலம் வெட்டி ஜேசிபி மூலமாகச் சுடுகாட்டினை சமன் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது தகவல் அறிந்து வந்த அண்ணமார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தினை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் வருவாய் துறையினர் மற்றும் அந்தியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிறை பிடிப்பு செய்த ஜேசிபி வாகனத்தை விடுவித்துக் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து கிராம மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துக் கிராம மக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் மயானத்தினை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றபோது கிராம மக்கள் மயானத்தில் திரண்டு ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்தி ஜேசிபி வாகனத்தைச் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

