புதுடெல்லி: இன்று காலை டெல்லியில் கூறிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் இக்கூடத்தில் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுமெனத் தெரிகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை குழு, வரும் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளது.
மக்களுக்கான தேர்தல் அறிக்கை
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைக்கு, இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
“தற்போது நாடு ஒரு மாற்றத்தை விரும்புகிறது. தற்போதைய பாஜக அரசு வழங்கும் உத்தரவாதங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிர்கிறது என்ற அவர்களின் முழக்கத்தின் அதே தலைவிதியைத்தான் கொண்டிருக்கும்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும். நமதுதேர்தல் அறிக்கை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. தேர்தல் அறிக்கைகள் கூறப்பட்டிருக்கும் அத்தனை வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்”.இவ்வாறு அவர் கூறினார்.



