
சாலை விபத்தில் 3 இளைஞர்கள் பலி!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே கியாஸ் லாரிமீது பைக் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்கள் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (வயது 19). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோரும் நண்பர்கள்.
இவர்கள் 3 பேரும் நேற்றிரவு பெரம்பலூர் நோக்கி ஒரே பைக்கில் சென்றனர். அப்போது பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே சென்றபோது அந்த வழியாகக் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்துகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

