புதுச்சேரி சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. சஸ்பெண்டு!

Advertisements

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்துச் சபை நிகழ்வுகளைத் தொடங்கினார்.

அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாத சபாநாயகருக்கு சபையை நடத்த தகுதியில்லையென ஆவேசமாகக் கூறினார்.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று தரையில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது சட்ட விரோதம், ஜனநாயக விரோதம், அவமானகரமான செயல் எனக்கூறி கோஷம் எழுப்பினார்.

இதனிடையே சபைக்குள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் நுழைந்தனர்.

அப்போது தர்ணா செய்த நேரு எம்.எல்.ஏ. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரை அழைத்தார்.

அவர்களும் நேரு எம்.எல்.ஏ.வுடன் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருப்பினும் சபாநாயகர் தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார்.

இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவாவை பேசச் சபாநாயகர் அழைத்தார்.

அப்போது நேரு எம்.எல்.ஏ. சட்டமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர்தான் சக உறுப்பினர்களின் உரிமைகளைப் பெற்று தருகின்றனர் எனப் பேசினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம், அவையை தொடர்ந்து நடத்த ஏதாவது ஒரு முடிவு எடுங்கள். எங்கள் உரிமைகள் மீறப்படுகிறது.

சொந்த பிரச்சினைகளுக்காக உங்களுக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது என ஆவேசமாகப் பேசினார்.

அப்போது நேரு எம்.எல்.ஏ. தொடர்ந்து கோஷம் எழுப்பினார். அவருக்கு ஆதரவாகச் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரும் பேசினர்.

இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்படும் நேரு எம்.எல்.ஏ.வைக்கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாகவும், அவரை அவையிலிருந்து வெளியேற்றும்படியும் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சபை காவலர்கள் நேரு எம்.எல்.ஏ.வை வெளியேற்றினர். மற்ற 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தனர்.

புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட மன்ற விதிகள், மரபுகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதாகக் கூறி அவர்மீது நேரு எம்.எல்.ஏ. நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சட்டசபை செயலரிடம் அளித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரும் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை அளித்திருந்தனர்.

இந்தத் தீர்மானத்தைச் சட்ட விதிகளின்படி விவாதத்திற்கு அனுமதிப்பேன் எனச் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியிருந்தார். ஆனால் இன்றைய சட்ட மன்ற அலுவல் பட்டியலில் இது இடம்பெறவில்லை.

இதைக் கண்டித்தே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *