
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் வெங்காயம், மக்காச்சோளங்களை வைத்து கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன் முன்னிலையிலும்,அரியலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன் நாராயணசாமி நாயுடுவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் விலையாக விவசாய பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டும்.
வறட்சி மற்றும் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு நிவாரணம் உடனே வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு சின்ன வெங்காயத்திற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்ததை நீக்கி சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் நிர்ணயித்து விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்திட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை வைத்துக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கரூர் தென்னை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் சம்பத் சாமியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

