Murder: அண்ணன், தம்பிக்கு போலீசார்  வலைவீச்சு!

Advertisements

பக்கத்து வீட்டுகாரரை வெட்டிச் சாய்த்த அண்ணன், தம்பி!

கட்டிட தொழிலாளியைச் சரமாரியாக  அரிவாளால்  வெட்டி விட்டுத் தப்பியோடிய  – அண்ணன், தம்பியைப் போலீசார்  வலைவீச்சு தேடிவருகின்றனர்.

ஆறுமுகநேரி:  முத்துகிருஷ்ணன் (வயது 49).கட்டிட தொழிலாளியான இவருக்குச் சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியில் கூட்டாம்புளியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவரின் மகன்களான அழகு லிங்கம் (29), வீரமணி (23) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

சில மாதங்களாக இவர்கள் இருவரும் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பலரிடமும் வீண் பிரச்சினைகள் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக அழகுலிங்கம், வீரமணி ஆகியோர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே பக்கத்து வீட்டுக்காரரான முத்துகிருஷ்ணனிடமும் அந்த இரு நபர்களும் தகராறு செய்துள்ளனர். முத்துகிருஷ்ணனின் மகன்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்துகிருஷ்ணன் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணன், தம்பிகளான அழகு லிங்கமும், வீரமணியும் அரிவாளுடன் வந்து முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். உடல் முழுவதும் 11 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் முத்துகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். அப்போது அழகுலிங்கமும், வீரமணி யும் அங்கிருந்து ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் உடனடியாகத் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து லட்சுமிபுரத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்குப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முத்துகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் ஆகியோர் அழகுலிங்கம், வீரமணி இருவரையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *