மேகதாது விவகாரத்தில் தவெக அரசு தொடர் தவறு செய்கிறது – பாமக தலைவர் அன்புமணி!

மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு, மேலும் மேலும் தவறுகளை செய்வதாகப் பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல, ஆனால் தற்போது கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றும், இதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளார்.
எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *