
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என தமிழக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் கேள்விக்கு தவெக தலைவர் விஜய் அளித்த பதிலால் ஆளுநர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தற்போதைக்கு விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
112 பேரின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 118 பேரின் கடிதங்களை விஜய்யிடம் , ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது. 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் ஆட்சி அமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா என ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
112 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் அர்லேகரை நேற்று தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரம் கால அவகாசம் கொடுக்குமாறும் விஜய் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ஆளுநரோ 2 நாட்கள்தான் தரப்படும் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர், விஜய்யை அழைக்காததால் அந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
நேற்று இரவு விஜய், தனது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய் இன்று ராஜ்பவன் சென்றார்.
நேற்று விஜய்யுடன் செங்கோட்டையன், ஆதவ், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோர் உள்ளே சென்றனர். ஆனால் இன்று அப்படி யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. விஜய் மட்டும் உள்ளே சென்றார்.
அங்கு ஆளுநரும் விஜய்யும் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது விஜய்யிடம் ஆளுநர் ஏராளமான கேள்விகளை கேட்டாராம். அதாவது 112 பேரின் ஆதரவை வைத்துள்ளீர்கள், பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள்? ஆட்சி அமைந்தால் கவிழாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா என கேள்விகளை ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு விஜய் 112 பேரின் கடிதங்தகள் உள்ளன. மேலும் இடது சாரிகள், விசிகவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து 6 பேர் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்றாராம். இதை எப்படி வாய் வார்த்தையாக ஏற்க முடியும், அந்த 6 பேரின் கடிதம் இருந்தால்தானே அது அதிகாரப்பூர்வமாமானதாகும் என ஆளுநர் சொல்லிவிட்டார்.
இது போன்ற கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலால் ஆளுநர் திருப்தியடையவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
பொதுவாக தனி பெரும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அதை ஆளுநர் ஏற்க வேண்டும். 118 இடங்கள் இருந்தால்தான் அழைப்பேன் என சொல்வது சரியில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டசபையில்தானே தவிர ஆளுநர் மாளிகையில் அல்ல! விஜய்யை தவிர இன்னும் சில கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தால் விஜய்யிடம் 118 இடங்களை ஆளுநர் கேட்கலாம்.
அப்படி யாருமே உரிமை கோரவில்லை என்கிற போது விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் தாமதப்படுத்துவது தவறான செயல் என அரசியல் கட்சியினரும் அரசியல் பார்வையாளர்களும் தெரிவிக்கிறார்கள்.



