
தவெக உடன் கூட்டணி வைத்தது காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது என்று தெரிவித்தார்.
தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே தங்களின் ஒரே நோக்கம் என்றும் இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறினார்.
மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


