Advertisements

மக்கள் திலகம் எம்ஜிஆரின் உதவியாளர் மகாலிங்கத்தின் மரணத்திற்கு பின்னால் வெளியே தெரியாத ஒரு சோகக் கதை இருக்கிறது.
வெற்றி பெற்றால் நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் தோல்வி அடைந்தால் பக்கத்தில் ஒருவர் கூட நிற்க மாட்டார்கள்.சாகும் வரை ஒருவருக்கு காசு பணம் துட்டு மணி வேணும் என்பதற்கு உதாரணம் தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் உதவியாளர் மகாலிங்கத்தின் மரணம்.
யார் இந்த மகாலிங்கம்? அவரது கடந்த கால வாழ்க்கை என்ன?30 ஆண்டு காலம் எம்ஜிஆர் உடன் அவரது பயணம் எப்படி இருந்தது?
புரட்சித்தலைவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்ஜிஆரிடம் அவர் நடிகராக இருந்த போதும் முதலமைச்சராக இருந்த போதும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலர்தான் அவர்களில் ஒருவர்தான் இந்த மகாலிங்கம். காலம் சென்ற நாடக நடிகர் திரைப்பட நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகன்தான் இந்த மகாலிங்கம் தனது 19 ஆவது வயதிலேயே எம்ஜிஆர் இடம் வேலைக்கு சேர்ந்து விட்டார்
குண்டு கருப்பையா மரணத்திற்கு பிறகு அவரது குடும்பம் வருமானத்துக்கே வழியில்லாமல் திண்டாடியது இந்த சூழ்நிலையில் தான் அவரது மகன் மகாலிங்கத்தின் கையெழுத்து மிகப் பிரமாதம் என்று கேள்விப்பட்டு எம்ஜிஆர் அவரை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார் . அப்போது எம்ஜிஆரிடம் அனகாபுத்தூர் ராமலிங்கம்,குமாரசாமி பிள்ளை ,சபாபதி, ரத்தினம் எனநான்கு பேர் உதவியாளர்களாக இருந்தார்கள் இவர்களில் மகாலிங்கத்தை தனது தனி உதவியாளராக சேர்த்து கொண்டார்
எம்ஜிஆருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதிப்போடுவது, தொலைபேசி வந்தால் எடுத்து பதில் சொல்வது, எம்ஜிஆரின் உதவியால் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பணம் அனுப்புவது, திருமணங்களுக்கு வாழ்த்து அனுப்புவது என்பது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் நேரடியாக பதில் அனுப்பும் கடிதங்களை தயார் செய்வதும் இவரது வேலைதான் . எம்ஜிஆர் சினிமா ஸ்டூடியோவில் இருந்தாலும் சரி படப்பிடிப்பில் இருந்தாலும் சரி அங்கு நேரிலேயே சென்று கையெழுத்து பெற்று தனது வேலையை சுறுசுறுப்பாக செய்து வந்தவர் மகாலிங்கம்
1977 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் முதன் முதலாக முதலமைச்சர் பதவியேற்ற போது முக்கியமாக இரண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் ஒன்று மகாலிங்கம் தனது சிறப்பு நேர்முக உதவியாளர் என நியமித்த உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது . இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிறப்பு உதவியாளராக ராமாபுரம் தோட்ட வீட்டிலேயே மகாலிங்கம் தங்கியபடி தனது பணிகளை தொடர்ந்தார்
சட்டசபையில் முதலமைச்சர் எம்ஜிஆர் பேச வேண்டிய உரைகளை தயார் செய்யும் பணியையும் மகாலிங்கமே மேற்கொண்டார்
1978ல் மகாலிங்கம் சுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் எம்ஜிஆர் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது ஒன்பது நாட்களும் மதுரை மேலூர் மகாலிங்கம் மனைவி வீட்டில் இருந்து தான் எம் ஜி ஆர் க்கு சாப்பாடு வந்தது
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு மகாலிங்கம் கேஸ் சிலிண்டர் கம்பெனி ஒன்றை தொடங்கினார். பங்குதாரர்களுடன் ஒரு அலுமினிய ஆலையை நடத்தினார் எனினும் அந்த தொழில்களில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டது . எம்ஜிஆரிடம் வேலை பார்த்த கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக யாரிடமும் அவர் உதவி கேட்டதில்லை தனித்தே வாழ்ந்தார் மகாலிங்கம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவரது இடது கண்ணில் இரும்பு துகள் பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டது வலது கண்ணில் லென்ஸ் வைக்கும் போது அந்த லென்ஸ் உடைந்து அந்த கண்ணும் பாதிக்கப்பட்டது இதனால் இரண்டு கண்களும் பார்வை இழந்து மனம் உடைந்து உடலும் தளர்ந்து சாப்பிட முடியாத நிலைமைக்கு ஆளானார்
கடந்த பல மாதங்களாக சாப்பிட முடியாமல் தவித்த மகாலிங்கம் எலும்பும் தோலுமாக கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார் . மகாலிங்கத்தின் மரணப் பயணம் கிட்டதட்ட ஒரு அனாதைப் பயணமாகவே நடந்து முடிந்தது முன்னாள் அமைச்சர் பொன்னையன் மட்டும்தான் மயானம் வரை சென்று அவருக்கு இறுதி விடை அளித்தார் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என்று ஒருவர் கூட அவரது மரண நிகழ்வுக்கு வரவில்லை என்பது வேதனையான தகவல் ஆகும்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்பார்கள் மகாலிங்கத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதுதான்
Advertisements
