
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார். விழா முடிந்ததும் எஸ்.என்.ஆர் கல்லூரியில் இருந்து கார் மூலம் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்துக்கு சென்றார். அங்கு மாநகராட்சி சார்பில் 47 ஏக்கர் பரப்பளவில் ரூ.133.21 கோடி மதிப்பில் அமையவுள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் எஸ்.என்.ஆர் கல்லூரி பகுதி, காந்திபுரம் நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை உள்பட அனைத்து பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த முகாமில் பங்கு பெற்றுள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு வரக்கூடிய மக்களுக்கு அவர்களது புகார் மனுக்கள், தேவைகள், குறைகளை கேட்டறிந்து ஆவணங்களை பூர்த்தி செய்யும் வழிமுறைகளை அதிகாரிகள் கூறினர். இவ்வாறாக பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இன்று முதல் ஜனவரி 6- தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜனவரி 31 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
கோவையில் இ-சேவை மையம் தொடங்கி வைத்தார். கோவை சிறைச்சாலை செல்லும் வழியில் செம்மொழி பூங்கா திறக்க அடிக்கல் நாட்டினார். தென் மாவட்டங்களில் அரசின் நலத்திட்டங்கள் நல் வழியில் செயல்படுத்தப்படும். அரசின் திட்டங்கள் 30 நாட்களுக்குள் சென்றடைய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஜனவர் 31-ஆம் தேதி வரை மக்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். எக்காரணம் கொண்டும் அதிகாரிகள் தட்டிக் கழிக்க கூடாது. என்று உரையாற்றினார்.


