
சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியினர் கோப்பையை வென்றனர். இந்திய அணிக்கு ஐ.சி.சி. பரிசுத் தொகையாக 40 கோடி வழங்கியது. பி.சி.சி.ஐ பரிசுத் தொகையாக 51 கோடியை அறிவித்துள்ளது. இப்போது, இந்திய மகளிர் அணியை கொண்டாடும் பி.சி.சி.ஐ ஒரு காலக்கட்டத்தில் இந்திய மகளிர் அணியை கண்டுகொண்டதே கிடையாது. 2002ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு இந்திய மகளிர் அணி சென்ற போது, தங்க கூட ஹோட்டல் அறை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை பி.சி.சி.ஐ . அங்கு வசித்த இந்தியர்கள் வீட்டில் தங்கியிருந்து இந்திய அணியினர் விளையாடினர்.
அடுத்து 2003ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய மகளிர் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இப்போதும், பி.சி.சி.ஐ கைவிட்டது. இந்த முறை பிரபல நடிகையும் இந்தியாவின் முதல் கிரிக்கெட் பிராட்காஸ்டருமான மந்திரா பேடிதான், விளம்ரங்களில் நடித்த பணத்தை கொடுத்து, இங்கிலாந்துக்கு செல்ல வைத்தார். அதுமட்டுமல்ல, பல வகைகளில் இந்திய மகளிர் அணிக்கு மந்திரா பேடி உதவிக்கரமாக இருந்தார். இப்படி, எதுவுமே இல்லாத போது, இந்திய மகளிர் அணியுடன் உடன் இருந்தவர்தான் மந்திரா பேடி. இப்போது, எல்லாம் வந்த பிறகு ஏராளமான நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்ய முன் வருகின்றன. பரிசுத் தொகைகளை அறிவித்தும் வருகின்றன. இதை பார்த்து காட்டமான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சில விஷயங்களை கூறிள்ளார்.
இது தொடர்பாக, மிட்-டே நாளிதழில் அவர் எழுதியுள்ள இந்திய மகளிர் அணியினருக்கு வேண்டுகோள் கொடுத்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 1983ம் ஆண்டு நாங்கள் உலகக் கோப்பையை வென்ற போதும், இதே போன்றுதான் பல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பல எங்களுக்கு கிடைக்கவில்லை. அதற்காக, நாங்கள் வருந்தவில்லை. எங்களை காரணம் காட்டி அவர்கள் தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்திக் கொண்டனர். பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் கொடுக்கவும் செய்தனர். மீடியாக்களும் அதை செய்தியாக்கின. வெட்கங்கெட்டவர்கள் தங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை மீடியாக்கள் உணர்ந்திருக்கவில்லை. எங்களை அந்த வெட்கம்கெட்ட மனிதர்கள் பயன்படுத்தியது போல, உங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் ‘என்று கூறியுள்ளார்.



