
கவர்னரே போதும் எங்களுக்குப் பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்குப் பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியைத் தேடி தருவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார.
சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையைத் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவது பற்றி?
யாருக்கு காய்ச்சல் வந்து இருக்கிறது என்று எங்கள் திமுக பொருளாளர் பாலு தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
தோல்வி பயம் காரணமாகப் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். இப்போது தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு வந்தபோது, இங்கு வந்து ஆறுதல் சொல்லி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
பாஜக வளர்ந்து வருவது உண்மையா?
நீங்களே உண்மையா என்று கூறுகிறீர்கள். நான் என்ன சொல்ல…
திமுகவை கார்னர் செய்வதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
எங்கள் பிரசாரத்தின் மூலம் எதிர்கொள்வோம். ஏற்கனவே இருக்கும் கவர்னரே போதும் எங்களுக்குப் பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்குப் பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியைத் தேடி தருவார்கள் என்பது உண்மை.
வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாகப் பாஜக கூறுவது?
இது குடும்ப கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்ப பாச உணர்வோடு அண்ணா, தலைவர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தது.
திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பதில்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.
பாஜக 2 இடத்தைப் பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?
பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்பு தெரியும். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்குப் பின் தெரியும்.
தேர்தல் அறிக்கை மத்திய அரசு திட்டங்கள்போல் உள்ளதே?
எங்கள் கூட்டணி தான் மேல வரப்போகிறது. அந்தத் தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறேன்.
பிரதமர் வேட்பாளராக உங்கள் மனசாட்சிபடி யாரை முன்நிறுத்துவீர்கள்?
இந்தியா கூட்டணி வேட்பாளரை முன் நிறுத்துவேன் என்று கூறினார்.


