தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் வாயிலாக 20 லட்சம் இளைஞர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்தடைந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க, சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து ஈட்டன் நிறுவனம்-தமிழக அரசு இடையே ரூ.200 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஈட்டன் நிறுவன ஆலை விரிவாக்கம், பொறியியல் மையம் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசு – ஈட்டன் நிறுவனம் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் சென்னையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.