பெங்களூரு:கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘மூடா’ விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. அதனால் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இந்த விவகாரத்தில் நான் பதற்றம் அடையவோ, கவலைப்படவோ தேவையில்லை.
எதிர்க்கட்சியினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறினர். தற்போது அவற்றை நிரூபிக்க முடியாமல் அவர்கள் தான் திணறி வருகிறார்கள். நான் பொய் சொல்லவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. அதனால் நான் கவலை இல்லாமல் இருக்கிறேன்.
யார் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பது? கட்சி மேலிடமும், எம்.எல்.ஏ.க்களும் தான் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பார்கள். எதிர்க்கட்சியினர் அல்ல.
கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தாக்கல் செய்த அறிக்கை மந்திரிசபையில் தாக்கல் செய்யப்படும். இதற்கான மந்திரிசபை கூட்டம் நாளை (5-ந் தேதி) நடக்கிறது.
அந்த கூட்டத்தில் மேற்கொண்டு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும். எங்களுக்கும் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது.
அந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் சுகாதார துறை மந்திரியும், தற்போது எம்.பி.யுமான சுதாகர் கூறியுள்ளார்.
அப்படியானால் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கு தெரியுமா?. அவர் தவறு செய்திருப்பதால் அவருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு சித்தராமையா கூறினார்.