பாரிஸ்: பிரான்சில் 71 வயதான நபர் ஒருவர், தன் மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்கநிலை அடைய செய்ததுடன், அவரை கற்பழிக்க ஆன்லைனில் ஆள் எடுத்து பலாத்காரமும் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 முதல் 74 வயதுள்ள சுமார் 72 பேர் அவரை கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெண்கள் மீதான பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், தந்தை போன்றோர்களால் பெண்கள் பல பாலியல் துயரங்களை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில், பிரான்சில் கட்டிய மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்து கணவனே கற்பழிக்க செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் 71 வயதான டொமினிகியூ என்பவர், 72 வயதான கிசெல் என்ற தனது மனைவிக்கு தூக்க மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்ததுடன், அவரை பலாத்காரம் செய்ய ஆன்லைனில் ஆள் எடுத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாகவே இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
ஷாப்பிங் சென்டர் ஒன்றில் குட்டை பாவாடை அணிந்து வந்த பெண் ஒருவருக்கு தெரியாமல் கேமராவில் படம்பிடித்த வழக்கில் டொமினிகியூவை போலீசார் கைது செய்தனர். அவரது மொபைல், கம்ப்யூட்டரை கைப்பற்றி பார்க்கையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது போனில் தனது மனைவியை பலர் பலாத்காரம் செய்யும் போட்டோக்கள் வைத்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: டொமினிகியூ – கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்துள்ளார். இதற்காக கிசெலின் சாப்பாடு அல்லது மதுவில் தூக்க மாத்திரை மற்றும் போதை பொருளை கலந்துள்ளார் டொமினிகியூ.
26 – 74 வயதுள்ளவர்கள்
அவர் ஆழ்ந்த மயக்க நிலையை அடையும்போது, பலாத்காரம் செய்ய அவர் ‘எடுத்த’ வாடகை நபருக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் வந்து கிசெல்லை கற்பழித்துவிடுகிறார். கிசெல்லை இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 26 முதல் 74 வயதுடையவர்கள். பலாத்காரம் செய்தவர்களில் 50 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்த கிசெல் உடன், மகள், 2 மகன்களும் வந்துள்ளனர்.
டிச.,20ல் தீர்ப்பு
உடல்நிலை பாதிப்புடன் காணப்பட்ட கிசெல்லுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல், ‘பலாத்காரம் செய்யும்போது தான் போதையில் இருப்பதை கூட கிசெல் உணரவில்லை. அந்தளவிற்கு அதிகமான போதை மருந்து கலக்கப்பட்ட உணவு கொடுத்துள்ளனர். அதீத போதையால் என்ன நடந்தது என்றே கடந்த 10 ஆண்டுகளாக அவரால் உணர முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு, ஞாபக மறதியையும் எதிர்கொள்கிறார். சிகிச்சை அளித்தும் பயனில்லை’ என்றார். இந்த வழக்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.