ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் நாட்டின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் தன் நாட்டின் சுயமரியாதையையும் இறையாண்மையையும் பறைசாற்றும் வகையில் பேசினார்.
அவர் தனது உரையில், “ஈரான் நாடு அமைதியையும் இறையாண்மையையும் விரும்புகிறது. வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கோ அல்லது எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்திற்கோ நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
ஈரான் அதிபரின் இந்த கம்பீரமான உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஹைதராபாத் ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விசேஷமான வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
இந்திய திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி: தி பிகினிங்’ படத்தில், நாயகன் அமரேந்திர பாகுபலி தனது படையினருக்கு வீர உரையாற்றி, எதிரிகளை வீழ்த்த போர்க்களத்தில் முன்நின்று வழிநடத்தும் போர்க்காட்சியை அந்த வீடியோவில் இணைத்துள்ளனர்.
அமரேந்திர பாகுபலியின் பின்னணியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஐ.நா.வில் பேசிய “நாங்கள் ஒருபோதும் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” என்ற சக்திவாய்ந்த மேற்கோளையும் பின்னணி குரலாகக் கோர்த்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய சினிமாவில் உலகப் புகழ்பெற்ற ஒரு போர்க்காட்சியையும், ஈரான் அதிபரின் ராஜதந்திர உரையும் இணைத்து வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சர்வதேச அளவில் நெட்டிசன்களால் தீவிரமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


